Menu

Sunday 25 June 2017

158 வகையான மீன் வளர்க்க தடை, கட்டுப்பாடுகள்


அலங்கார மீன்களை வளர்க்கவும், காட்சிப்படுத்தவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 158 வகையான மீன்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் அலங்கார மீன் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும், போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. இது மக்களின் உணவு பிரச்னையில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாட்டிறைச்சி உண்போருக்கு எழுந்துள்ள இந்த பிரச்னை போல், நாளை மீன் சாப்பிடக்கூடாது என்றும் கூறுவார்கள் என்று தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில் அதன் தொடக்கமாக மத்திய அரசு 158 வகையான அலங்கார மீன்கள் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய அரசிதழில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகின்ற மீன்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் அவற்றின் சுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விலங்குகளை கொடுமைப்படுத்துதலை தடை செய்யும் 2016ம் ஆண்டு சட்டத்தின் தொடர்ச்சியாக இது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: 
அலங்கார மீன்களை கண்ணாடி குவளைக்குள் அடைத்து வளர்த்தல் கூடாது. 
அலங்கார மீன்களை கண்காட்சியாக வைப்பதும், விற்பனை செய்வதும் கூடாது.
அலங்கார மீன்களை வளர்க்கின்ற மையங்களில் முழு நேரமும் மீன்துறை நிபுணர், கால்நடை மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும். இவர்களுக்கு ஒரு உதவியாளரையும் நியமிக்க வேண்டும்.
ஒரு இஞ்ச் தடிமன் உள்ள மீன் வளர்க்க ஒரு கேலன் (நான்கரை லிட்டர்) தண்ணீர் பயன்படுத்த வேண்டும். 
அக்வாரியங்களில் வெப்பநிலை அதிகரிக்காமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பவளப்பாறை பகுதிகளில்  மீன்கள் பிடிக்க கூடாது. 

வளர்ப்பு மிருகங்கள் விற்பனை செய்யப்படுகின்ற மையங்களில் வைத்து அலங்கார மீன்களை காட்சி படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது. 
இந்த சட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது அது தற்போது அலங்கார மீன்கள் வளர்ப்பதை தொழிலாக கொண்டுள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தமிழகம், கேரளாவில் இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் உள்ளனர். சட்டத்தில் உள்ள அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சிறு தொழில் ரீதியில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு என்பது கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். 
தற்போது ஏராளமான வீடுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களிலும் அலங்கார மீன்கள் தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. கோல்டன் பிஷ், கப்பி, பிளான்டி, சோட்டெயில், மோளீஸ், ஏஞ்சல், ஸீப்ரா, டிராஸ், காட்பிஷ், ரிஸ்பரோ உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அலங்கார மீன்களாக வளர்க்கப்படுகின்றன. 

ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை மதிப்புள்ள அக்வாரியங்கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. ரூ.10 முதல் ரூ.2 லட்சம் வரை விலை மதிப்புள்ள அலங்கார மீன்களும் இன்று அலங்கார மீன் வளர்ப்பு சந்தையில் இடம்பெற்றுள்ளன. மீன் வளர்ப்பு மையங்கள், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யும் கூடங்கள், பயிற்சி வகுப்புகள் என்று விரிவான துறையாகவே அலங்கார மீன் வளர்ப்பு தொழில் காணப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அலங்கார மீன்கள் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெறுகிறது. மீன் வளர்ப்புக்கான உபகரணங்கள் தயாரித்தல், உணவு தயாரித்தல், வளர்ப்பு மையங்கள் என்று லட்சக்கணக்கானோர் இதனை நம்பி தொழில் செய்கின்றனர். நம்பிக்கை அடிப்படையில் வாஸ்து மீன்களும் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இப்போது அலங்கார மீன்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வகைகள் பல உணவுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த சட்டம் மீன் சார்ந்த தொழில்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுறது.

No comments:

Post a Comment