Menu

Thursday 20 July 2017

தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டியில் வெற்றிபெறலாம் வாங்க!

பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம், எரிபொருள் சேமிப்பு குறித்து தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. மாணவர்கள் பள்ளி மூலமாகவோ அல்லது தனியாகவோ பதிவு செய்து கலந்து கொள்ளும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. 

`பள்ளி மாணவர்களுக்கான இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, சிங்கப்பூர் பயணம், லேப்டாப், டேப்லெட்கள், ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழ் வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறது பெட்ரோலியப் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு (Petroleum Conservation Research Association (PCRA)).

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் சீனியர் பிரிவில் கலந்துகொண்டு தேசிய அளவில் இரண்டாவது இடம்பிடித்தவர், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி எமோரா மெர்சி. 15,000 ரூபாயும் லேப்டாப்பும் பரிசாகப் பெற்றார்.
இவரிடம் இந்தப் போட்டி குறித்துப் பேசியபோது, ``பெட்ரோலைச் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த கருப்பொருளை மையமாகவைத்துச் செயல்பட வேண்டும். டிராஃபிக் சிக்னலில் காத்திருக்கும்போது வாகன இன்ஜினின் இயக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும். இதனால் எரிபொருள் இழப்பைத் தடுக்கவும், காற்று மாசுபடுவதைக் குறைக்கவும் முடியும் என்பதை மையமாகவைத்து ஓவியம் வரைந்தேன். தேசிய அளவில் இரண்டாவது பரிசைப் பெற்றிருக்கிறேன். முதல் பரிசைப் பெற்றிருந்தால் ஜப்பானுக்குப் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த ஆண்டு, முதல் பரிசைப் பெற்றால் சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்" என்கிறார் எமோரா மெர்சி.

எரிபொருள் சேமிப்பு குறித்த தேசியப் போட்டியில் பள்ளிகளும், பள்ளி மாணவர்களும் தனித்தனியே பதிவுசெய்துகொண்டு கலந்துகொள்ளலாம். பள்ளிகள் பதிவுசெய்துகொண்டு பள்ளி வேலை நாள்களில் பள்ளியிலேயே போட்டிகளை நடத்தலாம். பள்ளி மாணவர்கள் www.pcracompetitions.org தளத்தில் பதிவுசெய்துகொண்டும் கலந்துகொள்ளலாம். இவ்வாறு பதிவுசெய்யும்போது பள்ளி அடையாள அட்டை, முதல்வரின் சான்றிதழ் கடிதம், ஆதார் அட்டைப் போன்றவற்றைப் பதிவேற்ற வேண்டும்.

கட்டுரைப் போட்டியில் ஏழாம்வகுப்பு முதல் பத்தாம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கட்டுரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதலாம். கட்டுரை 700 வார்த்தைக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் சொந்த கையெழுத்தில் எழுதி அனுப்ப வேண்டும். கட்டுரைப் போட்டி செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்திட வேண்டும்.
சிறிய அளவிலான எரிபொருள் சேமிப்பு பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதுதான் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிக்கான தலைப்பு. பள்ளி அளவில் நடத்தும் போது ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 30 மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும். போட்டியை 15.09.2017-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

ஓவியப்போட்டியில் 5-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்புவரை ஜூனியர் பிரிவிலும், 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் சீனியர் பிரிவிலும் கலந்துகொள்ளலாம். ஓவியப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் A3 தாளில் வரைய வேண்டும். ஓவியம்வரைய இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் சிறந்த இரண்டு ஓவியங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 100 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் தேசிய அளவில் காட்சிப்படுத்தப்படும். இவ்வாறு காட்சிப்படுத்தும் போதும் டெல்லியில் வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவு வழங்கப்படுகிறது.

புதிர்போட்டியில் கலந்துகொள்பவர்களிடம் வேளாண்மை, பாதுகாப்பு, மரபுசாரா எரிபொருள், போக்குவரத்து, பொது அறிவு போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். புதிர்போட்டிகள் இணையத்தில் நடத்தப்படும். இதில் முதல் நிலையில் 10 கேள்விகளுக்கு 10 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். ஆறு கேள்விகளுக்குச் சரியாக பதிலளிப்பவர்களுக்குச் சான்றிதழும் அடுத்த நிலையில் பங்குபெற வாய்ப்பும் வழங்கப்படும். இரண்டாவது நிலையில் 15 கேள்விகளுக்கு 10 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். பத்து கேள்விகளுக்குச் சரியாக பதிலளிப்பவர்களுக்கு இறுதிநிலை போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். இந்தப் போட்டியில் 30 கேள்விகளுக்கு 15 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். 25 கேள்விகளுக்கு மேல் சரியாக பதிலளிப்பவர்களுக்குப் பரிசும் சான்றிதழும் சான்றிதழும் வழங்கப்படும். இந்தப் போட்டி ஜூலை 15 தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

தமிழக பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துகள்.

No comments:

Post a Comment