Menu

Wednesday 2 August 2017

'போதிய தாய்ப்பால் கொடுக்காதது இந்திய பொருளாதாரத்தை 1400 கோடி டாலர்கள் குறைக்கும்'

ஆகஸ்ட் 1- 7: உலக தாய்ப்பால் வாரம்
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பற்றாக்குறையான தாய்ப்பாலைக் கொடுத்தால், அது இந்தியப் பொருளாதாரத்தை 14 பில்லியன் (1400 கோடி) டாலர்கள் குறைக்கக் கூடும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு:
* இந்தியாவில் மட்டும் சுமார் 1 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் தாய்ப்பால் பற்றாக்குறையால் இறக்கின்றனர். இதனால் 14 பில்லியன் டாலர்கள் அளவில் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
* குழந்தைகளின் இறப்புக்கான முக்கியக் காரணிகளான டயரியா மற்றும் நிமோனியா ஆகிய கொடும் நோய்களை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தடுக்க முடியும்.
* குழந்தைகளுக்கு மட்டுமின்றி தாய்மார்களுக்கும் தாய்ப்பால் வரப்பிரசாதமே. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கான ஆபத்தைக் குறைக்க முடியும்.
* சீனா, இந்தியா, நைஜீரியா, மெக்ஸிகோ மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டும் போதுமான அளவு தாய்ப்பால் அளிக்காததால், ஒவ்வோர் ஆண்டும் 2,36,000 குழந்தைகளுக்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர்.
* இந்த நாடுகளில் கணக்கிடப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்கால இறப்பு விகிதம் மற்றும் இழப்புகளின் அளவு சுமார் 119 பில்லியன் டாலர்களாக இருக்கும்.
* தாய்ப்பாலே குழந்தையின் முதல் தடுப்பூசி. அதுவே குழந்தைகளை கொடிய நோய்களில் இருந்து காப்பாற்றும்.
* ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 194 நாடுகளில், உலகத்தில் உள்ள ஒரு நாடுகூட தாய்ப்பால் கொடுப்பதற்காக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்கவில்லை. குறிப்பாக 40% குழந்தைகளே 6 மாதம் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்கின்றனர். 23 நாடுகளில் மட்டுமே 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது.
* குழந்தைகளுக்கு 6 மாதம் முழுமையான தாய்ப்பால் அளிக்க ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் ஆண்டுக்கு 4.7 டாலர்கள் செலவழித்தால் போதும். இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 5,20,000 குழந்தைகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முடியும். இதனால் மருத்துவச் செலவுகள் குறைந்து, 10 ஆண்டுகளில் சுமார் 300 பில்லியன் டாலர்களை உருவாக்க முடியும்.
* தாய்ப்பால் அளிப்பது என்பது மிகவும் உபயோகரமான முதலீட்டு வழி. இதன்மூலம் நாட்டின் இளைய சமுதாயத்தையும், பொருளாதாரத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
* உலகளாவிய அளவில், தாய்ப்பால் அளிக்கக் கோரும் விழிப்புணர்வுக்கான முதலீடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகள் ஆண்டுதோறும் சுமார் 250 மில்லியன் டாலர்களை மட்டுமே அதற்காக செலவழிக்கின்றன.
* இதன்மூலம் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை மாற வேண்டும்.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment