Menu

Wednesday, 16 August 2017

திருநெல்வேலி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் 1605 காலி பணியிடங்கள்: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

திருநெல்வேலி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 1,605 அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், தகுதி உடையவர்கள் இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 21 வட்டாரங்களில் காலியாகவுள்ள அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கும், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கும்  நேர்முகத் தேர்வு,  இன சுழற்சி முறையில் பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இப்பணியிடங்களுக்கு பெண்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அளிக்கலாம்.

அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடிப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கடந்த 1.7.2017 அன்று 25 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 38 வயது, விதவை மற்றும் ஆதரவற்றோர் 40வயதுக்குள்பட்டவராகவும் இருக்கலாம். அங்கன்வாடி உதவியாளரைப் பொருத்தவரை விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவராகவும்,1.7.2017 அன்று 20 முதல் 40 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் 43 வயது, விதவை மற்றும் ஆதரவற்றோர் 45 வயதுக்குள்பட்டவராகவும் இருக்கலாம்.

விண்ணப்பதாரர் காலியாகவுள்ள மையம் உள்ள ஊரில் வசிப்பவராகவோ அல்லது 10 கி.மீ.தொலைவிற்குள் வசிப்பவராகவோ இருக்கலாம். இந்த தொலைவிற்குள் இருந்து யாரும் விண்ணப்பிக்காவிட்டால், அவ்வூராட்சியை ஒட்டி 10 கி.மீ.க்கு மிகாமல் உள்ள ஊரில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர். நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் அதே வார்டு அல்லது அருகில் உள்ள வார்டு, இல்லையெனில் அதே மண்டலத்துக்குள்பட்டவர் தகுதி உடையவராவர்.

இதற்கான விவரங்கள் w‌w‌w.‌t‌i‌r‌u‌n‌e‌l‌v‌e‌l‌i.‌n‌i​c.‌i‌n  என்ற திருநெல்வேலி மாவட்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பத்துடன் கல்விச் சான்று,வயதுச்சான்று, இருப்பிடச் சான்றுக்கான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்களுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் நேரிலோ, பதிவு தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் ஒப்புதல் ரசீது பெற்று செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment