தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஷ்வரர்
திருக்கோயில் மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி தூத்துக்குடி
மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் வெங்கடேஷ்
அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் முற்காலத்தில் முத்துக்
குளிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்ததால் இவ்வூருக்கு 'முத்துநகர்'
என்ற பெயர் உள்ளது. இதைப்போல சங்கரராமேஷ்வரர், பாகம்பிரியாள் அம்பிகைக்கு
மந்திர உபதேசம் செய்த ஊர் என்பதால் இவ்வூருக்கு 'திருமந்திர நகர்' என்ற
புராணப் பெயரும் உண்டு. திருமந்திர நகரான தூத்துக்குடியின் மத்தியப்
பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில்
15 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மகா
கும்பாபிசேகம் நடைபெற உள்ளது.
மகா கும்பாபிசேகத்துக்கு 100 யாகக் குண்டங்கள் அமைக்கப்பட்ட
உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 4 கால யாகசாலை பூஜைகள் நாளை காலை 7
மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி வருகிற 8-ம் தேதி வரை நடக்கிறது.
இதற்காக 250 சிவாச்சாரியார்கள் திருமுறை ஓதுவார்கள். இந்த யாகசாலை
பூஜைகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
வரும் 8-ம் தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் ராஜகோபுரம்,
விமானங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிசேகம்
நடக்கிறது.
கும்பாபிசேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு
உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வரும் 16-ம் தேதி
சனிக்கிழமை வேலைநாளாக அனுசரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்
அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment