Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Thursday, 7 September 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு வருகிற 9–ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி,
இது குறித்து மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 544 அங்கன்வாடி பணியாளர், 95 குறு அங்கன்வாடி பணியாளர், 475 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 4 ஆயிரத்து 841 பேரும், குறு அங்கன்வாடி பணிக்கு 462 பேரும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 2 ஆயிரத்து 546 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் வயது, கல்வித்தகுதி, இனசுழற்சி ஒதுக்கீடு, தூரம் உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் 1,102 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்த 790 பேர், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்த 58 பேர், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த 254 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் நிராகரிக்கப்பட்டவர்கள் தவிர மற்ற விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 9–ந் தேதி காலை 9–30 மணி முதல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், தூத்துக்குடி நகர்ப்புறத்துக்கு ஜின்பாக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும் நேர்முகத் தேர்வு நடக்கிறது. நேர்முக தேர்வு குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment