தலைப்பு : கருப்புச் சூரியன்
விண்வெளி தூவிய விடியல் விதையே
விருதுப்பட்டியில் முளைத்த வியத்தகு செடியே
அன்னை சிவகாமியின் அகப்பையின் வழியே
அகிலம் போற்றிடப் பிறந்தவன் நீயே !
பள்ளிக் கல்வியே பயிலாத பூமகன்
பாரெங்கும் பள்ளிகளை எழுப்பிய திருமகன்
பசியின்றி வாடிய பிள்ளைகளைப் பார்த்தவன்
பசிப்பிணிப் போக்கிட மதியஉணவு தந்தவன்...
மழலை வயதிலே தேசியத்தில் நாட்டம்
விடலைப் பருவத்திலே விடுதலைப் போராட்டம்
கடலலை போலவே ஓயாத ஓட்டம்
அண்ணல் சத்தியமூர்த்தியே இவருக்கு ஊட்டம்...
கொள்கை மாறாத குன்றா மணிவிளக்கே
இலக்கை எட்டிவிடப் போராடும் அகல்விளக்கே
தப்பாது என்றும் இவரின் மனக்கணக்கே - இவர்
ஏழைகளின் இதயத்தில் சுடர்விடும் திருவிளக்கு..
நீர் வளம் பெருகிட அணைகளை தந்தவர்
வருவாய் உயர்த்திட தொழிற்சாலைகளை நிறுவியவர்
அறியாமையை அகற்றிட கல்விச்சாலைகள் அமைத்தவர்
எளிமையாய் வாழ்ந்து எல்லோரையும் கவர்ந்தவர்...
மூவுலகம் பாராட்டும் முடிசூடா மனிதனே
பாகுபாடு பார்க்காத பார்போற்றும் புனிதனே
காவியம் போற்றும் காமாட்சியெனும் தலைவனே - நீ
கதராடை அணிந்த கருப்புச் சூரியனே!
ந.மீனாட்சி சுந்தரம்
திருநெல்வேலி.
No comments:
Post a Comment