திருநெல்வேலியில் சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள கடைக்கு உடனடியாக சீல் வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சரத் இனிகோ என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் சரவணா செல்வரத்தினம் என்ற பெயரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெறவில்லை. நிரந்தர மின் இணைப்பும் பெறவில்லை, வளாகத்தில் கழிவு நீர் வெளியேறுவதற்கு முறையான வசதியும் செய்யவில்லை.
வணிக வளாகத்தின் கட்டிடப்பணிகள் முடிவடையாத நிலையில் கடந்த 2016 டிசம்பர் 23-ம் தேதி விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டுவிட்டது. மேலும் அந்த வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த போதிய வசதி செய்து தரப்படாததால் வாகனங்கள் தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் மக்கள் அவசரமாக வெளியேற அவசர வழி, தீயணைப்பான்கள் உள்ளிட்ட வசதிகளும் இல்லை.
இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, எனவே இந்தக் கட்டிடத்தின் விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த மனு மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சசிதரன் - சுவாமிநாதன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் நெல்லை சரவணா ஸ்டோர் கட்டிடத்தின் கார் பார்க்கிங் பகுதியில் நகைக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அந்தப் பகுதியை நெல்லை மாவட்ட ஆட்சியர் உடனடியாக சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment