Menu

Tuesday, 29 August 2017

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான இ-மெயில் சேவை: மத்திய அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மின்னஞ்சல் (இ-மெயில்) சேவையை வழங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் மின்னஞ்சல் கொள்கையின்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தேசிய தகவலியல் மையத்தின் மூலம் பாதுகாப்பான மின்னஞ்சல் ஐ.டி. வழங்கப்படும். @gov.in என்ற டொமைனில் இந்த சேவை வழங்கப்படும்.
இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ள சர்வர்களால் அரசின் தரவுகள் சட்டவிரோதமாக திருடப்படுவதைத் தடுப்பதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
நாடு முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருப்பதால், இது மிகப்பெரிய இ-மெயில் சேவையாக இருக்கும். இதன்மூலம் அரசு தரவுகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கும்.
இதனால் அரசின் செயல்பாடு அதிகரிப்பதுடன், அனைத்து தகவல் தொடர்பும் மின்னஞ்சல் மூலமே நடைபெறும். இதனால் காகிதமில்லா நிர்வாகத்தை நோக்கி நகர முடியும். இந்த திட்டத்தின் சோதனை முயற்சியாக சில துறைகளில் இந்த சேவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- ஐஏஎன்எஸ்

No comments:

Post a Comment