பொது மக்கள் தங்கள் பயன்படுத்திய பொருட்களை இல்லாதோர்க்கு வழங்க
நெல்லை கலெக்டர் 'அன்பு சுவர்' திட்டத்தை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் பலரும் பயன்படுத்திய பொருட்கள் நாளடைவில் மறக்கப்பட்டு புதிய
பொருட்கள் வந்ததும், வீணாக குப்பைக்கோ, பழைய பொருட்கள் கடைக்கோ விற்று
விடுகின்றனர். இந்த பொருட்களை இல்லாதோர் பயன்படுத்தும் வகையில் புதிய
திட்டம் ஓன்றை நெல்லை கலெக்டர் அலுவலக வாயிலில் கலெக்டர் சந்தீப் தந்தூரி
துவங்கி வைத்தார். இதற்கு அன்பு சுவர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அன்பு சுவர் மையத்தில் பொது பயன்படுத்திய ஆடைகள், குழந்தைகள்
விளையாட்டு பொருட்கள், காலணிகள், புத்தகங்கள், பொம்மைகள் உள்ளிட்ட
பயனுள்ள பொருட்களை வழங்கலாம். அதை தங்களுக்கு பயன்படும் பொது மக்கள்
எடுத்து செல்லலாம்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ஈரான் நாட்டில் இந்த திட்டம் முதல்
முறையாக தொடங்கப்பட்டது. இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் உள்ளிட்ட வட
மாநிலங்களில் இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டப்படி பொதுமக்கள் தங்களுக்கு
வேண்டாத உடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்த மையத்தில் தாமாக
கொண்டு வந்து வைக்கலாம்.
இந்த மையத்தில் பாதுகாவலர், கண்காணிப்பாளர் எவரும் இருக்க மாட்டார்கள்.
ஏழை, எளிய பொது மக்கள் தங்களுக்கு எது தேவையோ அதை எடுத்து செல்லலாம்.
அதற்கு எந்த கட்டுபாடும் இல்லை. தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை
மாவட்டத்தில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு
இருக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து இன்னும் பல இடங்களில் இந்த திட்டத்தை
தொடங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலெக்டரின் இந்த முயற்சிக்கு பொது மக்கள் வெகுவாக பாராட்டு
தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் பொருட்கள் குவியும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment