Menu

Tuesday 8 August 2017

பள்ளிகளில் யோகா கட்டாயம்: மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய அளவிலான யோகா கொள்கையை வகுத்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் சுகாதாரக் கல்விக்கான பாடப் புத்தகங்களை வழங்க மனித வள மேம்பாட்டுத் துறை, என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, என்சிடிஇ ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அஷ்வினி குமார் உபாத்யாய என்ற வழக்கறிஞர் மற்றும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் ஜே.சி.சேத் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. யோகா மற்றும் சுகாதாரக்கல்வியை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் அல்லது தேசிய யோகா கொள்கையை வகுத்து அதை ஊக்குவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான பெஞ்ச், இம்மனுவையே கோரிக்கையாகக் கருதி, இவ்விவகாரம் குறித்து 3 மாதத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என கடந்த நவம்பரில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த மனுவை நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிமன்றத்தின் தரப்பில், ''மத்திய அரசே இது குறித்து முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் என்ன கற்பிக்க வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது எங்களின் வேலையும் இல்லை. எங்களால் எப்படி வரையறை செய்ய முடியும்?'' என்று கேள்வி எழுப்பியது.
அத்துடன், ''பள்ளிகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமை கிடையாது'' என்றும் நீதிபதிகள் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment