Menu

Monday, 14 August 2017

பிறப்பு, இறப்பை தாமதமாக பதிவதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம்:

ஊராட்சிகளில் பிறப்போ, இறப்போ நிகழ்ந்தால் 21 நாட்களுக்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். பேரூராட்சிகளில் செயல் அலுவலரிடமும், நகராட்சியில் நகராட்சி ஆணையரிடமும், மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவாளரிடமும் பதிவு செய்ய வேண்டும்.
21 நாட்களுக்கு பிறகு, 30 நாட்களுக்குள் பதிவு செய்தால், காலதாமத கட்டணமாக ரூ.2 செலுத்தி மேற்கூறிய இடங்களில் பதிவு செய்யலாம். 31-வது நாள் முதல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய வேண்டுமென்றால் ஊராட்சித் தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் எழுத்துப் பூர்வமான அனுமதி பெற்று, காலதாமத கட்டணமாக ரூ.5 செலுத்தி பிறப்பு, இறப்பை பதிவு செய்யலாம்.
ஓராண்டுக்கு பிறகு பதிவு செய்ய வேண்டுமென்றால் குற்றவியல் நடுவர் நீதிமன்ற ஆணை பெற்ற பின்பே பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது. அதில் சில தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஓராண்டுக்கு பிறகு பிறப்பு, இறப்பு பதிவு செய்வதற்கான ஆணை வழங்கும் அதிகாரத்தை, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அந்த பதவிக்கு மேல் உள்ளவர்கள் வழங்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.
தற்போது அரசு, தனியார் சேவைகள் அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என்பதால், பலர் தாமதமாக பிறப்பு சான்று பெற முயன்று வருகின்றனர். பிறப்பு, இறப்பு பதிவு செய்ய ஆணை வழங்கும் அதிகாரம் வருவாய் கோட்டாட்சியருக்கு மாற்றப்பட்டது தெரியாமல், பொதுமக்கள் பலர், முகவர்களிடம் ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுத்து ஏமாறுகின்றனர். முகவர்களும் நீதிமன்ற செலவு, வழக்கறிஞர் செலவு எனக்கூறி அதிக பணம் பெற்று வருகின்றனர்.
அதனால், பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க, ஆணை வழங்கும் அதிகாரம் மாற்றப்பட்டது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, “நல்ல யோசனை, ஏழை மக்கள் ஏமாறுவதை தடுக்க, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment