சமூக சுகாதார அணுகு முறைகள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்து நெல்லை மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாவட்டமாக மாற்றும் திட்டத்திற்கான “அண்ணாச்சி யூஸ் தி டாய்லெட்” விழிப்புணர்வு லோகோவை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: வருகிற டிசம்பருக்குள் நெல்லை மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட அளவிலான “திருநெல்வேலி சுகாதார லீக்” போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 19 யூனியனில் அடங்கிய அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பங்கேற்கலாம். இந்த போட்டியின் கால அவகாசம் ஆக.1 முதல் அக்.31 வரையாகும். கிராம பஞ்சாயத்துகள் இரு பிரிவுகளாக பிரித்து ‘அ’ பிரிவில் 300 மற்றும் அதற்கு குறைவான தனி நபர் இல்ல கழிப்பறை கட்டி முடித்தல் ‘ஆ’ பிரிவில் 300க்கும் மேலான எண்ணிக்கை தனி நபர் இல்ல கழிப்பறை கட்டி முடித்து 100 சதவீதம் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற கிராம ஊராட்சிகள் என வகைப்படுத்தப்படும். ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் அக்.31க்குள் தனி நபர் கழிப்பறை கட்டி முடித்தல், பொது கழிப்பறைகளை சரியான முறையில் பராமரித்தல், அனைத்து கிராம மக்களும் கழிப்பறை பயன்படுத்துதலை உறுதி செய்தல் மற்றும் கண்காணித்தல். இதற்கான கண்காணிப்பு காலம் நவ.1 முதல் டிச.31 வரையாகும். நவ.10ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தி 100 சதவீதம் திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற கிராமமாக ஊராட்சியை அறிவித்தல், பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை சரியான முறையில் மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்குதல், 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பை, பொருட்களை தவிர்த்தல், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், மகளிர் குழு பெண்கள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் இந்த போட்டியில் உறுதி செய்ய வேண்டும்.
தூய்மை கிராமாக அறிவித்து நவம்பர் மற்றும் டிசம்பரில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகள் அறிவிக்கப்படும். ‘அ’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சிகளுக்கு அடுத்த ஆண்டு ஜன.26ம் தேதி நடக்கும் கிராம சபாவில் முடிவெடுக்கப்படும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
‘ஆ’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள கிராம வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இது மட்டுமின்றி அதிக எண்ணிக்கை தனி நபர் இல்ல கழிப்பறையை கட்டிக் கொடுக்கும் கொத்தனார்கள், அதிக அளவில் மக்களை கழிப்பறை பயன்படுத்த ஊக்கப்படுத்திய சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த போட்டிக்காக கிராம ஊராட்சிகளை தத்தெடுக்கும் கம்பெனிகள், நிறுவனங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து கிராம ஊராட்சிகளும் அதற்கான நுழைவு படிவத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெற்று ஜுலை 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார். இதற்கான பயிற்சியில் டிஆர்ஒ முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, ஆர்டிஒக்கள் நெல்லை மைதிலி, தென்காசி ராஜேந்திரன், பீட்பேக் பவுண்டேசன் சிஇஓ அஜய் சின்கா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் முத்துலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் உமாதேவி மற்றும் மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment