Menu

Friday 14 July 2017

குடை வாடகைக்கு விடும் வியாபாரத்தில் பிரச்சனை : நல்ல தீர்வு இருந்தா சொல்லுங்க.

சீனாவில் தற்போது கூட்டு நுகர்வு (sharing economy) கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஒரு பொருளைச் சொந்தமாக வாங்கிப் பயன்படுத்தாமல், தேவையானபோது வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதம் ஷென்ஜென் பகுதியில் ஒரு குடை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. சைக்கிளை வாடகைக்கு விடுவதுபோல, இவர்கள் குடைகளை வாடகைக்கு விட்டனர். இரண்டே மாதங்களில் 3 லட்சம் குடைகளை இழந்துவிட்டனர். ஒரு குடையை இங்கே வாடகைக்கு எடுக்கும்போது, முன்பணம் சிறிது செலுத்தவேண்டும். பிறகு எவ்வளவு மணி நேரம் உபயோகிக்கிறோமோ அதற்குரிய வாடகையைச் செலுத்திவிட வேண்டும்.

இந்தக் கூட்டு நுகர்வு மூலம் ஒருவரால் வாங்க முடியாத பொருட்களைக்கூட வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த முடியும். என்றோ ஒருநாள் தேவைப்படக்கூடிய பொருளை வாங்கி வீட்டில் வைத்து, குப்பைகளைச் சேகரிக்கவும் வேண்டியதில்லை. “சைக்கிள் வாடகைக்கு விடுவது உலகம் முழுவதும் வெற்றிகரமான தொழிலாக இருக்கிறது. அதைப் பார்த்துதான் குடைகளை வாடகைக்கு விடும் தொழிலில் இறங்கினோம். சீனாவின் 11 நகரங்களில் ஒரே நேரத்தில் இந்தத் தொழிலை ஆரம்பித்தோம். குடைகளை எங்களிடம் வாங்குவது வெகுசுலபம். பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் என்று எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால் திருப்பிக் கொடுப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சைக்கிள்களைப் பூட்டி, எங்கே வைத்துவிட்டுச் சென்றாலும் கொண்டு வந்துவிடலாம். ஆனால் குடைகளுக்கு அப்படிச் செய்ய முடியவில்லை. மக்கள் வேலிகளில் குடைகளை வைத்துவிட்டுச் சென்றால், வேறு யாராவது வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். இதுவரை 3 லட்சம் குடைகளை இழந்துவிட்டோம். ஒரு குடைக்கு முன்பணமாக 180 ரூபாய் வசூலிக்கிறோம். அரை மணி நேரப் பயன்பாட்டுக்கு 4.75 ரூபாய் வாடகை. ஒரு குடையை இழந்தால், எங்களுக்கு 570 ரூபாய் நஷ்டம். இப்படி எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்தாலும் பின்வாங்கப் போவதில்லை. விரைவில் சரியான தீர்வைக் கண்டுபிடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி குடைகளைச் சீனா முழுவதும் வாடகைக்கு விட இருக்கிறோம்” என்கிறார் குடை நிறுவனர்களில் ஒருவரான ஜாவோ.

No comments:

Post a Comment